செய்திகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரி

அனுமதியின்றி கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Published On 2020-09-07 10:43 GMT   |   Update On 2020-09-07 10:43 GMT
அனுமதியின்றி கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, ரெயில் சேவை ஆகியவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை இருப்பதாகவும், மருத்துவ தேவை, இறப்பு, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் படையெடுத்தனர். கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை இருப்பதால் அனுமதி இல்லை என கூறி வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பிவைத்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் கொடைக்கானலின் அழகை கண்டு ரசிக்க முடியாமல் திரும்பி சென்றனர். நீண்ட தொலைவில் இருந்து கொடைக்கானல் நுழைவாயில் வரை வந்து திரும்பிச் சென்றது அவர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

உரிய வழிகாட்டுதலின்படி சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News