செய்திகள்
முக ஸ்டாலின்

நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்- முக ஸ்டாலின்

Published On 2020-08-09 19:18 GMT   |   Update On 2020-08-09 19:18 GMT
கேரளா நிலச்சரிவு விபத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள், அங்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு அந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி 29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News