செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

ரூ.76½ கோடி செலவில் அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2020-07-18 01:32 GMT   |   Update On 2020-07-18 01:32 GMT
கொரோனா உயர் சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும்பொருட்டு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதல்-அமைச்சர் ஏற்கனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் இப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ரூ.76 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 2,414 கருவிகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பித்து, இதுவரை 530 கருவிகளை தருவித்துள்ளது.

பொதுவாக சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது குழாய்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 12 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும். கொரோனா நோயாளிகளுக்கு உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும்.

இக்கருவி மூலம் உயர்ஓட்ட ஆக்சிஜன் வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத்திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பினையும் தடுக்க முடிகிறது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். நிறுவனமும் பரிந்துரைத்துள்ள இக்கருவியை கையாளுவதற்கு மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ சிறப்பு பயிற்சி தேவையில்லை.

இக்கருவி தேவையின் அடிப்படையில் படிப்படியாக மேலும் அதிநவீன கருவிகளை மேலைநாடுகளில் இருந்து வாங்கி, கொரோனா சிகிச்சைக்காக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்துவதால் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News