செய்திகள்
அமைச்சர் எஸ்பி வேலுமணி

எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்- அமைச்சர் வேலுமணி

Published On 2020-07-08 02:21 GMT   |   Update On 2020-07-08 02:21 GMT
கொரோனாவில் இருந்து தமிழக மக்களை பூரணமாய் மீட்பதற்காக எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு, பகல் பாராது போராடி வருகிறார் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராக பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்ராயத்தை பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடி திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதனை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அளவில் உள்ளாட்சித்துறை அதிகமான சாதனைகளை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் உள்ளாட்சித்துறையின் சார்பாக 123 தேசிய விருதுகளை வென்று தாய் தமிழகத்திற்கு உள்ளாட்சித்துறை தலைப்பாகை சூட்டியிருக்கிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காத்திட அல்லும்பகலும் அயராது உழைத்து வரும் எங்கள் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சி தரத்தை அனைத்து அமைப்புகளும் பாராட்டி மகிழ்வதை காண பொறுக்காது, அறிக்கைகளை விட்டு மு.க.ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். மு.க.ஸ்டாலின் சுமத்தும் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் எதிர்கொள்ளத் தயார்.

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற இமாலாய வெற்றிக்குப்பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News