செய்திகள்
கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து நின்றது

Published On 2020-04-16 11:40 GMT   |   Update On 2020-04-16 11:40 GMT
கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து முழுவதும் நின்றது.

ஊத்துக்கோட்டை. ஏப்.16-

கிருஷ்ணணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி அந்திர அரசு வருடந்தோறும் 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த ஆண்டு கண்டலேறு அணை முழுவதுமாக வற்றி விட்டதால் ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆகஸ்டு மாத இறுதியில் ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கு போதிய தண்ணீர் வந்து சேர்ந்தது.

இதனால் கடந்த செப்டம்பர் 25-ந் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 810 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

இந்நிலையில் கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.

நேற்று இரவு ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 28-ந்தேதி முதல் நேற்று இரவு வரை 7.556 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 26.84அடியாக பதிவானது. 1117 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 260 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News