செய்திகள்
கோப்புபடம்

திண்டுக்கல் அருகே நூதனமுறையில் குட்கா கடத்திய கார் பறிமுதல்

Published On 2020-04-12 08:58 GMT   |   Update On 2020-04-12 08:58 GMT
திண்டுக்கல் அருகே நூதன முறையில் குட்கா கடத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு போலி பாஸ்களை பயன்படுத்தி சுற்றி திரிவதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று வடமதுரை அருகே போலி பாஸ் மூலம் வாடகைக்கு இயங்கிய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே திண்டுக்கல் தனிப்பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வாகன் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிள்ளைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்துல்அசீன் (வயது 35). இவர் ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் அத்தியாவசிய அலுவல் பணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் சென்று கொண்டிருந்தார்.

சந்தேகம் அடைந்த போலீசார் காரை மறித்து சோதனை செய்தனர். இதில் காரில் 5 மூட்டைகள் இருந்தன. எனவே போலீசார் மூட்டைகளில் என்ன உள்ளது? என கேட்டனர். அதற்கு அப்துல்அசீன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். எனவே போலீசார் சந்தேகமடைந்து மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது மூட்டைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீசார் அவரை காருடன் தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் அப்துல்அசீனிடம் விசாரணை நடத்தி காரை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News