செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

Published On 2020-03-28 02:44 GMT   |   Update On 2020-03-28 02:44 GMT
சூழலை புரிந்து கொண்டும் அனைத்து வங்கிக் கடன்களையும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைத்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் பயணத்தை தவிர்த்து விட்டதாலும் வாடகை வாகனங்கள் இயக்கம் முழுமையாக முடங்கி விட்டன. பிற தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவற்றை வாழ்வாதாரமாக கொண்ட பலர் அன்றாட செலவுகளுக்கே பணமின்றி தவித்து வருகின்றனர்.

ஆகவே அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்றும், சூழலை புரிந்து கொண்டும் அனைத்து வங்கிக் கடன்களையும் அடுத்த 3 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியும், ரிசர்வ் வங்கியில், பிற வங்கிகள் வைத்துள்ள பணத்திற்கான வட்டியும் 0.75 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடி கணிசமாக குறையும். அதேநேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகளுக்கு வட்டியை குறைக்க கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News