இந்தியா

அரசியல் வாரிசை நீக்கிய மாயாவதி

Published On 2024-05-08 05:38 GMT   |   Update On 2024-05-08 05:38 GMT
  • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.
  • ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார் .

அதன்படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார். அவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை' கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

கடந்த மாத இறுதியில், தேர்தல் கூட்டத்தில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பா.ஜ.க. அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி எடுத்த திருடர்களின் கட்சி பா.ஜ.க." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News