இந்தியா

3 சுயேட்சைகள் வாபஸ் பெற்றாலும் அரியானா அரசுக்கு ஆபத்து இல்லை- பாஜக அறிவிப்பு

Published On 2024-05-08 05:55 GMT   |   Update On 2024-05-08 05:55 GMT
  • பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
  • 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல்.

சண்டிகர்:

அரியானாவில் ரந்திர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பிர் சிங் சவான் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

2019 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள அரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்றனர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

இந்தச்சூழலில் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல் வெளியானதால் சூழப்பம் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News