இந்தியா

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி - மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!

Published On 2025-12-19 07:48 IST   |   Update On 2025-12-19 07:48:00 IST
  • இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் அணுசக்தி மசோதா.
  • பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை

இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.

நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.

இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.

அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.

திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.  

Tags:    

Similar News