செய்திகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதி சுற்றுலா பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கொடைக்கானலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்ற உத்தரவு

Published On 2020-03-18 13:50 GMT   |   Update On 2020-03-18 13:50 GMT
கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொடைக்கானல் மலை பகுதியில் அனுமதிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனியார் தங்கும் விடுதிகளில் அனுமதிக்கக்கூடாது என்றும் அறைகளுக்கு முன்பதிவை தவிர்க்க வேண்டும் எனவும் நேற்று தனியார் விடுதி உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறையினர் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் தங்கும் இடமான வட்டகானல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் ஜெர்மனியைச் சேர்ந்த 6 வெளிநாட்டு பயணிகளை தனியார் தங்கும் விடுதியில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கும் விடுதி உரிமையாளருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வட்டகானல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை உடனடியாக கொடைக்கானல் மலையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் அரசு ஆணையை மீறி தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வட்டகானல்  நுழைவு வாயிலில் உள்ள சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பின் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என காவலர்களுக்கு கோட்டாட்சியர் மற்றும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News