செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2020-03-07 03:23 GMT   |   Update On 2020-03-07 03:23 GMT
சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து பார்சலில் கடத்தி வந்த தங்க பவுடரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த அருண் பிரசாத்(வயது 24) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர், காற்று அடிக்கும் கருவிக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 398 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த சுனிதா ஜெயலதா(39) என்பவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 506 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த சர்பு நி‌ஷா(40) என்பவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 239 கிராம் தங்கத்தையும், கொழும்பில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இன்ஹமுல்லா(33) என்பவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 374 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 இலங்கை பெண்கள் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.67 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 517 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த சுனிதா ஜெயலதாவை கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு துபாயில் இருந்து பிரிண்டிங் பிரஸ்களில் பயன்படுத்தும் அச்சு மை தயாரிக்க பயன்படும் பவுடர் என்ற பெயரில் 20 கொரிய பார்சல்கள் வந்தன.

சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அதில் இருந்த முகவரி மற்றும் போன் நம்பரை விசாரித்தபோது போலி என்று தெரியவந்தது. இதையடுத்து அதில் ஒரு பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் இருந்த பவுடர் தங்கம் போல் மினுமினுப்பாக இருந்ததால் தண்ணீரில் கரைத்து பார்த்தபோது, அவை தங்கத்தை பொடியாக்கி பவுடருடன் கலந்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அனைத்து பார்சல்களையும் பிரித்து அந்த பவுடர்களை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தங்கப்பவுடரை தனியே பிரித்து எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான தங்கப்பவுடர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நூதன முறையில் நடந்த இந்த தங்கம் கடத்தல் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க பவுடரை பிரிக்கும் பணி தொடர்ந்து நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News