செய்திகள்
சின்னம்மாள் பிணமாக கிடக்கும் காட்சி.

போச்சம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி பலி

Published On 2020-03-04 14:33 GMT   |   Update On 2020-03-04 14:33 GMT
போச்சம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த விளங்காமுடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. ஓசூர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி பணியில் இருக்கும் இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், தனுஷ், மோனிஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்களுடன் ரவியின் தாயார் சின்னம்மாளும் வசித்து வந்தார்.

இவரது வீட்டின் பின் புறத்தையொட்டி மின்வயர் செல்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டருகே இருக்கும் மின் கம்பியில் உள்ள கம்பிகள் அறுபட்டு கீழே விழும் நிலையில் இருந்துள்ளது.

இதனை கவனித்த ரவி மற்றும் அவரது தாயார் சின்னம்மாள், நாகரசம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மனு கொடுத்து பல நாட்கள் ஆகியும் மின்வாரிய ஊழியர்கள் சீர்படுத்த வரவில்லை.

இதுகுறித்து ரவி கருணாகரனிடம் நேரில் சென்று கம்பியை சீர்படுத்தி தருமாறு கோரியுள்ளார். ஆனார் பழுதான மின் கம்பியை சீர்செய்ய யாரும் வரவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரவியின் தாயார் சின்னம்மாள் வீட்டின் பின்புறம் சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த ரவி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது, சின்னம்மாள் தலையில் காயம் ஏற்பட்டு மின்கம்பிகள் சுற்றிய நிலையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் விளங்காமுடி கிராம நிர்வாக அலுவலர், நாகரசம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கும், நாகரசம்பட்டி போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சின்னம்மாளின் உடலை மீட்டனர்.

பின்னர் போலீசார் சின்னம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நாகரசம் பட்டி மின்வாரிய இளநிலைபொறியாளரிடம் கேட்டபோது, மின்கம்பி மீது மட்டை விழுந்த காரணத்தால் மின்வயர் அறுபட்டு விழுந்துள்ளது. அதன் மீது தெரியாமல் சின்னம்மாள் மிதித்ததால் அவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மின்கம்பி பழுதானதாக யாரும் மனு அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

Tags:    

Similar News