இந்தியா

குழந்தையின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published On 2024-05-24 12:08 GMT   |   Update On 2024-05-24 12:08 GMT
  • மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
  • உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.

அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News