இந்தியா

என்னுடைய உடல் நலம் குறித்து பா.ஜனதா பொய் சொல்லி வருகிறது: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Published On 2024-05-24 11:38 GMT   |   Update On 2024-05-24 11:38 GMT
  • மக்களிடம் பா.ஜனதா சொல்லும் பொய்களுக்கு ஒரு அளவு உண்டு.
  • நான் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்தேன்

ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. பிரசாரத்தின் போது ஒடிசா மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கின் உடல் நலம் குறித்து பா.ஜனதா தலைவர்கள் பேசினார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பட்நாயக் அவருடைய வயது மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "மக்களிடம் பா.ஜனதா சொல்லும் பொய்களுக்கு ஒரு அளவு உண்டு. நான் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்தேன் என்பதை உங்களால் பார்க்க முடியும்" என்றார்.

பா.ஜனதா கட்சி தலைவர்கள் பட்நாயக் தனது வீடியோ மெசேஜ்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார் என விமர்சனம் செய்கிறார்களே என்று கேட்டதற்கு, பா.ஜனதா அவர்களுடைய சொந்த புலனாய்வை பயன்படுத்துகிறது என பதில் அளித்தார்.

நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கருதப்படும் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் "முதல்வர் நவீன் பட்நாயக்கை அவதூறு செய்வதன் மூலம், பிஜு ஜனதா தளத்தின் வாக்கு வங்கியை உயர்த்த அவர்களால் உதவி செய்ய மட்டுமே முடியும். வாக்குகளுக்காக நீங்கள் சிறந்த தலைவர்களை இழிவுப்படுத்த முடியாது. வரலாறு அவர்களை மன்னிக்காது" என்றார்.

Tags:    

Similar News