செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2020-01-08 08:48 GMT   |   Update On 2020-01-08 08:48 GMT
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வோர் செலவீனம் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இதற்காக அவுட் சோர்சிங் முறை அனைத்து நிலைகளிலும் அமல்படுத்தப்படுகிறது. சேலம் இரும்பு உருக்காலை என்.எல்.சி., ரெயில்வே, விமான நிலையங்கள் ஆகியவை தனியாருக்கு விட்டு விட மத்திய அரசு தயாராகி வருவதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் பாதை யாத்திரை பக்தர்களும் அதிக அளவில் வந்ததால் நகரில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் வந்திருந்தனர்.

மேலும் பாதுகாப்பிற்காக அலுவலகங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பந்த் என்பதால் கூடலூர் பகுதியில் இருந்து எஸ்டேட் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை.

மேலும் சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் இயக்கப்பட்டன. 30 சதவீத அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டபோதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News