செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பஞ்சமி நில பிரச்சனை- மு.க.ஸ்டாலின் ஆஜராக உத்தரவு

Published On 2019-12-18 05:25 GMT   |   Update On 2019-12-18 05:25 GMT
தி.மு.க. நாளிதழ் முரசொலி அலுவலக கட்டிட நிலம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பு ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

தி.மு.க. நாளிதழ் முரசொலி அலுவலக கட்டிடம் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. அந்த இடம் பஞ்சமி நிலம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தலைமைச் செயலாளர் மற்றும் முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குனராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.

உதயநிதி ஸ்டாலின் சார்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வக்கீல்கள் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கு அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இதுதொடர்பாக ஆணையம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில் வழக்கு, விசாரணைக்கு வர இருப்பதால் அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் ஆணையத்தின் முன்பு ஆஜர் ஆகும்படி குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது அனைத்து ஒரிஜினல் ஆவணங்களுடன் வரும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊடகங்களில், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு 7-1-2020 அன்று டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் வந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

முரசொலி இடம் தொடர்பாக ஏற்கனவே இந்த ஆணையத்திலிருந்து வந்த நோட்டீசின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையில் நான், ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் 19-11-2019 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளையின் சார்பாக விரிவான முதனிலை ஆட்சேபணை தெரிவித்தேன். அதேநேரத்தில், புகார் கொடுத்தவரான சீனிவாசனும், தமிழக அரசும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்தா வாங்கிச் சென்றது அனைவரும் அறிந்ததே!

நான் செய்தியாளர்களைச் சந்தித்து முரசொலி இடம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் விரிவாக எடுத்துக் கூறியது, அனைத்து ஊடகங்களிலும் - பத்திரிகைகளிலும் வெளிவந்தது.

அதனைத் தொடர்ந்து, புகார்தாரர் சீனிவாசன்மீது சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கதாகும்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு, ஏதோ புதியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் அனைத்தும், திசைதிருப்பும் நோக்கத்தோடு - அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் அந்த இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை விளக்கி 1985-ம் ஆண்டின் பட்டா நகலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆனால் 1923-ம் ஆண்டில் இருந்து அதன் மூலப்பத்திரத்தை வெளியிட்டால்தான் உண்மை வெளியே வரும் என்று பா.ஜனதா நிர்வாக குழு உறுப்பினர் தடா பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News