செய்திகள்
குட்கா

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Published On 2019-11-24 13:52 GMT   |   Update On 2019-11-24 13:52 GMT
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றத்தில் இயங்கி வந்த ‘குட்கா’ ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக ‘குட்கா’, ‘பான் மசாலா’ வை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்ச பணம் மாறியது தொடர்பான ‘டைரி’ சிக்கியது.

அதில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பெயர் இடம் பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியானது.

வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ‘குட்கா’ ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அதனைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேவேளையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதனால், அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்கைப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டி.ஜி.பி.  டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2-ம் தேதி டி.கே.ராஜேந்திரனும், 3-ம் தேதி கூடுதல் ஆணையர் தினகரனும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. 

குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News