தமிழ்நாடு

வடலூர் சத்திய ஞானசபையின் 158-வது ஆண்டு தொடக்க விழா

Published On 2024-05-24 07:04 GMT   |   Update On 2024-05-24 07:04 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்
  • ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ராமலிங்க அடிகளார் 23.5.1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ந் தேதியன்று சத்திய ஞானசபையை நிறுவினார்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 158-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. தொடர்ந்து தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6-ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜீவகாருண்யத்தை பறைசாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சத்திய தரும சாலையானது பலரது சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என்பதால், ஜீவதயவுடைய புண்ணியர்கள் பொருள் முதலியன உதவி செய்து அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் கூற்று.

அன்று முதல் சத்திய தரும சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்று நேரத்திலும் கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News