செய்திகள்
நாராயணசாமி

மத்திய அரசை கண்டித்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-14 13:13 GMT   |   Update On 2019-11-14 13:13 GMT
மத்திய அரசை கண்டித்து காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால்:

மத்திய அரசை கண்டித்து காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். வைத்திலிங்கம்எம்.பி. அமைச்சர்கள் கந்தசாமி , கமலக்கண்ணன், நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் ஏ.வி சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் கட்சி பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது பொருளாதாரத்தில் வளர்ச்சியை நாம் கண்டோம் .சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் என்று சொன்னால் இந்திய நாட்டின் வளர்ச்சி 9 சதவீதம். அந்த சமயத்தில்தான் பல தொழிற்சாலைகள் நம்ம நாட்டில் கொண்டு வரப்பட்டன.

இந்திய நாட்டிற்கு வெளிநாட்டு மூலதனம் ஏராளமாக வந்தது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. வேலைவாய்ப்பு பெருகியது. கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்றது. மனை எல்லாம் சிறப்பான முறையில் விற்கப்பட்டன.

ஆனால் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் அனைத்தும் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு இருந்த இந்த நிலையில், துரதிஷ்ட்டவசமாக 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாக ஆட்சி வந்தது.

ஆட்சி அமைத்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட 168 வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அதில் ஒன்றைக் கூட பிரதமர் இன்று வரை நிறைவேற்றவில்லை. நரேந்திர மோடி பேசுவதோடு சரி செயல்பாடு முற்றிலும் கிடையாது.


பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் இந்தியாவிற்கு உருப்படியாக ஒன்றும் வந்து சேரவில்லை. குறிப்பாக சீன பிரதமர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார். அமெரிக்கா நமக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறது. பிரதமரின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருக்கிறது என்பதனையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News