செய்திகள்
கி.வீரமணி

தேசத்துரோக வழக்கை விலக்கிக்கொள்ள வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்

Published On 2019-10-07 04:39 GMT   |   Update On 2019-10-07 04:39 GMT
பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்த காலந்தொட்டு நாட்டில் நடைபெறும் மதம் தொடர்பான வன்முறைகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவலங்கள், கொடுமைகள் இவற்றை எல்லாம் புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டு, பல்வேறு துறைகளை சார்ந்த 49 பேர் கையொப்பமிட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பினார்கள்.

கடிதம் எழுதிய அவர்கள் 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 2-வது முறையும் மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மிகப் பெரும்பான்மை பலத்தோடு அமைந்துவிட்ட நிலையில், எதேச்சதிகாரத்தின் பாய்ச்சல் அதிகரித்து வருகிறது.

49 பேர் மீது திணிக்கப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை பிரதமர் தலையிட்டு விலக்கிக்கொள்ளச் செய்வதன் மூலமாகவாவது, எங்களுக்கும் ஜனநாயக உணர்வு உண்டு என்று காட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். இந்தப் பிரச்சினை உலக நாடுகள் மத்தியிலும், இந்தியாவின் மதிப்பை மிகவும் கீழே தள்ளிவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News