செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்

Published On 2019-09-23 05:55 GMT   |   Update On 2019-09-23 05:55 GMT
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார்.

தேர்தல் நடந்து கிட்டத்தட்ட 3 மாதத்திற்குப் பிறகு, கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தனது மனுவில் தமிழிசை குற்றம்சாட்டியிருந்தார்.

கனிமொழியின் வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்தளாகவும் தமிழிசை குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாகவும், வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து, மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டீசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மனு மீதான விசாரணை அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News