செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

கருணாநிதியின் குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது- அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் தாக்கு

Published On 2019-09-16 10:57 GMT   |   Update On 2019-09-16 10:57 GMT
அண்ணா தொடங்கிய தி.மு.க. இப்போது கருணாநிதியின் குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை:

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெத்தானியாபுரத்தில் நடந்தது.

மேற்கு 2-ம் பகுதி செயலாளர் பைகாரா கருப்பசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை தொடங்கினார்.

அந்த இயக்கம் பட்டி தொட்டியெல்லம் மக்கள் மத்தியில் வளர்ந்தது. இதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரும்பாடுபட்டார். எனவேதான் அண்ணா தனது இதயக்கனியாக எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொண்டார்.

அண்ணா, தான் ஆரம்பித்த தி.மு.க.வில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை, உறவினர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி தி.மு.க.வுக்கு தலைவராக வந்தார்.

எம்.ஜி.ஆரை திட்டமிட்டே வெளியேற்றினார். அதனால் அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கம் உருவானது.

அண்ணாவின் பெயரில் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு மக்கள் அமோக ஆதரவை தந்தனர். தி.மு.க. கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கிறது.

இதனால் தி.மு.க.வில் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவே இளைஞர்கள் தேடி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. அண்ணா பல மொழிகளில் திறமைவாய்ந்தவர். ஆங்கில புலமையிலும் சிறந்து விளங்கியவர். அவரது கனவை நனவாக்கும் அரசை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கிரம்மர் சுரேஷ், சோலை ராஜா, பரவை ராஜா, பைக்காரா முத்துவேல், கலைச்செல்வம், பிரிட்டோ, முத்துக்கருப்பன், கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு 1-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

Tags:    

Similar News