செய்திகள்
மாணவன் கோபி

செஞ்சி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன் அடித்து கொலையா?- போலீஸ் விசாரணை

Published On 2019-08-16 05:31 GMT   |   Update On 2019-08-16 05:31 GMT
செஞ்சி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் ஏழுமலை. கட்டிட தொழிலாளி. அவரது மகன் கோபி (வயது 15). செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை பள்ளிக்கு கோபி சென்றார். சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு வந்தார்.அதன் பின்னர் கோபியை ஆடு மேய்த்து வரும்படி அவரது பெற்றோர் கூறினர். உடனே ஆடுகளை மேய்க்க காட்டு பகுதிக்கு கோபிசென்றார்.

மாலை நேரம் ஆனதும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோபியை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை செஞ்சியில் சங்கராபரணி ஆற்று ஓரத்தில் உள்ள வேப்பமரத்தில் கோபி தூக்கில் பிணமாக தொங்குவதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. ஏழுமலை மற்றும் உறவினர்கள் சங்கராபரணி ஆற்றுக்கு விரைந்தனர். அங்கு கோபி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறிஅழுதனர்.

இதுகுறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று மாணவன் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கோபியின் தந்தை ஏழுமலை செஞ்சி போலீசில் புகார்செய்தார். அதில் மாணவன் கோபி தூக்கு போட்டு தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. அவரது கால்கள் மரத்தில் இருந்து தரையில் படும்படி உள்ளது. எனவே அவரை யாரோ அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு உள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மாணவன் கோபி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags:    

Similar News