செய்திகள்
நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை - நொய்யல் ஆற்றில் 2வது நாளாக வெள்ளம்

Published On 2019-07-08 05:23 GMT   |   Update On 2019-07-08 05:23 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. ஆனால் இதுவரை போதுமான அளவு மழை பெய்யவில்லை.

தற்போது கோவையை ஒட்டி உள்ள கேரள பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 176 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 48 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 866.40 மீட்டராக அதிகரித்து உள்ளது.

சனிக்கிழமை 865.40 மீட்டராக இருந்தது. மழை காரணமாக அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1 மீட்டரும், கடந்த ஒரு வாரத்தில் 2 மீட்டரும் அதிகரித்துள்ளது.

சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளதால் அணையில் இருந்து கோவைக்கு குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் 3.8 கோடி லிட்டரில் இருந்து 5.5. கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் முதல் அணையான சித்திரைசாவடி தடுப்பணை நிரம்பியது. இதனை தொடர்ந்து அதன் மதகு திறக்கப்பட்டது.

அதில் இருந்து ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் வேகமாக வெளியேறியது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி ராஜ வாய்க்கால் வழியாக வேடப்பட்டி, கோளராம்பதி, புதுக்குளம், நாகராஜபுரம், நரசாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கு சென்றது.

கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை பேரூர் படித்துறையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்று 2-வது நாளாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

மழை தீவிரம் அடையும் போது நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் வகிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரூர் படித்துறைக்கு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருவார்கள். இந்த நிலையில் தற்போது பேரூர் படித்துறையில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வெள்ளியங்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பச்சைப் பசேல் என்று மரம், செடி கொடிகள் வளர்ந்த இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்து உள்ளது.

இந்த அணையின் நீர் மட்டம் 100 அடியாகும். நீலகிரி மாவட்டம், அணையின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணைக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 87 அடியாக இருந்தது.

இதனை தொடர்ந்து மின் உற்பத்திக்காக அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செந்நிறத்தில் ஓடியது.

இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டதும் பவானி ஆற்றில் வெள்ளம் வடிந்தது.

பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அத்திக்கடவு, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி சாகர் அணையை சென்றடையும்.



Tags:    

Similar News