செய்திகள்

ஓடும் ரெயிலில் வெயிலுக்கு பலியான 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2019-06-13 09:14 GMT   |   Update On 2019-06-13 09:14 GMT
வட மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது ஓடும் ரெயிலில் வெயிலுக்கு பலியான 5 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை:

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 3-ந் தேதி வட மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் மூலமாக சென்றனர். உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி, ஆக்ரா பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் இருந்து கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கோவைக்கு திரும்பினர்.

இவர்களில் கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த கலா தேவி (58), தெய்வானை (74), நீலகிரி மாவட்டம் கேத்தியை சேர்ந்த பச்சையா (80), குன்னூர் ஓட்டுப்பட்டரையை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பையா (71), பாலகிருஷ்ணன் (67) ஆகியோர் ரெயிலில் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். ரெயில் ஜான்சி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென 5 பேரும் மயங்கினர்.

இதனை பார்த்த மற்ற பயணிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் ஜான்சி ரெயில் நிலையம் வந்ததும் டாக்டர்கள் விரைந்து 5 பேரையும் சோதனை செய்தனர். அப்போது 3 பேர் இறந்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று இரவு குன்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சுப்பையா, கலா தேவி ஆகியோரின் உடல்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. 2 விமானங்களில் 3 பேரின் உடல்களும் நேற்று இரவு கோவைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று காலை ஜான்சியில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்ட தெய்வானை, பச்சையா ஆகியோரின் உடல் கோவை வந்து சேர்ந்தது. பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News