செய்திகள்

கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம்- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2019-06-06 11:29 GMT   |   Update On 2019-06-06 11:49 GMT
மாநிலத்துக்கு எதிராக செயல்படும் கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர் விதிகளை மீறி தலையிடுவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கவர்னரின் செயல்பாட்டை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பிப்ரவரி 13-ந் தேதி தொடங்கிய போரட்டம் 18-ந் தேதி வரை 6 நாட்கள் நீடித்தது. இந்த விவகாரம் தேசிய அளவிலும் எதிரொலித்தது.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரடியாக புதுவை வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

அதன்பிறகு கவர்னர் சமரச பேச்சுநடத்தியதை அடுத்து போராட்டத்தை நாராயணசாமி கைவிட்டார்.

அவர் இதுபற்றி கூறும் போது, தற்காலிகமாக போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் போராடுவோம் என்று கூறினார்.

இப்போது கவர்னருக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் நிகழ்ச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நாம் கவர்னருக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் உள்ளோம். நியமன எம்.எல்.ஏ. வழக்கில் கவர்னர் வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? நியமிக்கப்பட்டவருக்கு அதிகாரமா? என்பதில் சென்னை ஐகோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கவர்னர் கிரண்பேடி டெல்லியில் 10 நாள் தங்கி மேல்முறையீடு செய்து இருக் கிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு இருந்தாலும் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் கோடைகால கோர்ட்டில் அவசர வழக்காக மீண்டும் வழக்கை தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதேநேரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். வருகிற 7-ந் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிதி, நிலம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அப்படி முடிவெடுத்தாலும் அதை 21-ந் தேதிக்கு பிறகுதான் அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யார் மீதும் போடக் கூடாது என்றும் கூறியுள்ளனர். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் என்னை மனுதாரராக சேர்க்கும்படி கூறியுள்ளனர்.

கவர்னர் நமக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இருப்பினும் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தரும்படி கேட்டுள்ளேன். ஓரிருநாளில் பிரதமரை சந்திப்பேன். நிதி, உள்துறை மந்திரியையும் சந்திக்க உள்ளேன்.


2½ஆண்டாக கவர்னர் மாநில அரசை செயல்பட விடாமல் தொல்லை கொடுத்தார். இதனால் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டது. கவர்னரை எதிர்த்து 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம். மீண்டும் கவர்னரை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

டெல்லியில் இவ்வழக்கிற்காக கவர்னர் வேலை செய்து வருகிறார். ஒரு கவர்னர் மாநிலத்துக்கு நிதியை பெற்றுத்தர வேண்டும், வளர்ச்சியை உருவாக்கித்தர பாடுபட வேண்டும்.

ஆனால், நமது கவர்னர் தொல்லை கொடுத்து வருகிறார். இதுபோன்ற கவர்னரை வாழ்நாளில் சந்தித்தது கிடையாது. தினமும் அதிகாரிகளை சந்திப்பது, தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிப்பது என கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? நமது வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார் என நினைத்தேன். அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கவர்னர்தான் காரணம். இதற்காக அவருக்கு நன்றி சொன்னேன். மக்கள் தீர்ப்பிற்கு பிறகும் கவர்னர் திருந்தவில்லை.

கவர்னர் புதுவைக்கு சாபக்கேடு. அதனால்தான் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உங்கள் ஒத்துழைப்பும், கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பும் இல்லாமல் போராட முடியாது.

கடந்த போராட்டத்தில் மதச்சார்பற்ற அணிகள் திரண்டு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால்தான் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க முடிந்தது. மீண்டும் கவர்னரின் எதேச் சதிகாரத்தை முறியடிப்போம். புதுவை மக்களால் வெறுக்கப் படக்கூடிய கவர்னர் கிரண்பேடி மட்டும்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News