இந்தியா

விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்

Published On 2024-04-26 05:26 GMT   |   Update On 2024-04-26 07:14 GMT
  • வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும் என உத்தரவு.

புதுடெல்லி:

இந்தியாவில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த எந்திரங்களில் பொத்தானை அமுக்கி வாக்களித்ததும் அந்த வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளை உறுதி செய்யும் எந்திரம் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் முதல் பயன்படுத்தப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றப்படுவதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதே இதற்கு காரணமாகும்.

குறிப்பாக எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் வகையில் மின்னணு எந்திரங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பான வழக்கில் முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கில் ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

அதன் பேரில் தற்போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாடிகளின் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். விவிபாட் எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "விவிபாட் எந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் சிஸ்டம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஒரு முறை செயல்படுத்தக்கூடியவை. அவற்றை மாற்றி அமைக்க முடியாது. இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவை இவற்றை தயாரித்து கொடுக்கின்றன" என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வசதியாக விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முதலில் உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு தீர்ப்பில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்யும் நடைமுறையை 5 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளாகும்.

ஆனால், நீங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது.

இந்த எந்திரங்களின் செயல்பாடுகளில் சில சந்தேகங்கள் இருந்ததாலேயே, அது குறித்து தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் திறன் குறித்து 2-வது முறையாக தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க முடியாது.

தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சி கிடையாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை இன்று வழங்கினார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறிய நீதிபதிகள் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கட்சியின் சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கும் நடைமுறை தொடர வேண்டும்.

வாக்காளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க விவிபாட் ஒப்புகை சீட்டுகளை கூடுதலாக எண்ணுவதற்கான முடிவை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி வேட்பாளர்கள் யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியை ஆய்வு செய்யலாம்.

எந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் ஸ்டிராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும்.

மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியில் பயன்படுத்தும் சிப், பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்.

மின்னணு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பகத்தன்மை உள்ளது. எனவே விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News