செய்திகள்
கோப்புப்படம்

கமலின் சர்ச்சை பேச்சு குறித்து மோடி கூறியது சரிதான்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-05-15 07:11 GMT   |   Update On 2019-05-15 07:11 GMT
கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்த போது ஒரு பெண் தனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.

எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா? அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.


தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பல முகதோற்றத்தில் உள்ளார். அவரிடம் தோல்வி பயம் தெரிகிறது. நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். சந்திரசேகர ராவை பார்த்த பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை தி.மு.க. தெரிவிக்காதது ஏன்?

தமிழகத்தில் முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீடு திட்டங்களின் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, தீவிரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.
Tags:    

Similar News