செய்திகள்

2023-ம் ஆண்டுக்குள் குடிசைவாழ் மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் - சூலூரில் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Published On 2019-05-03 21:22 GMT   |   Update On 2019-05-03 21:22 GMT
தமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvan #SulurConstituency
கோவை:

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இருகூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், தொலைநோக்குடன் நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குடிசைகளில் வாழும் ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்த ஜெயலலிதா, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 15 லட்சம் பேர் குடிசை வீடுகளில் வாழ்வதாக கணக்கிடப்பட்டது. இதில் இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள அனைவருக்கும் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கஷ்டப்படுகின்றனர். இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இந்த அரசு கொண்டு வந்தது.

ஆனால் அ.தி.மு.க.விற்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் உடனடியாக கோர்ட்டிற்கு சென்று இதற்கு தடை பெற்று விட்டனர். தேர்தல் முடிந்ததும் கோர்ட்டில் இதற்கான தடையை நீக்கி ஏழை குடும்பங்களுக்கு மீண்டும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அ.தி.மு.க.வின் 47 ஆண்டுகால வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்து தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

இந்த தேர்தலுடன் அ.தி.மு.க. அரசு காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் அவரது தந்தை கருணாநிதியால் கூட இது முடியவில்லை. அப்படியிருக்க மகன் மு.க.ஸ்டாலினாலும் முடியவே முடியாது. அ.தி.மு.க. அரசு 100 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்யும்.



ஏனென்றால் தமிழக மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. பெற்றுள்ளது. தமிழகம் இன்று அமைதியாக உள்ளது. இங்கு சாதி சண்டைகள் இல்லை. மதச்சண்டைகள் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு தரும் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், மகேந்திரன் எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். #OPannerselvan #SulurConstituency
Tags:    

Similar News