செய்திகள்

கோவில்களில் நடைபெறும் காதுகுத்து- திருமண நிகழ்ச்சிகளில் நகை திருடும் பெண் கைது

Published On 2019-04-27 09:38 GMT   |   Update On 2019-04-27 09:38 GMT
கோவில்களில் நடைபெறும் காதுகுத்து, திருமண நிகழ்ச்சிகளில் நகை திருடும் பெண் வடபழனியில் சிக்கினார்.

சென்னை:

வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை பையுடன் காணாமல் போனது.

இதுபற்றி வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம், இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள 2 கேமராக்களை ஆய்வு செய்த போது பட்டுச்சேலை உடுத்தி நகைகளை அணிந்தபடி சுற்றித்திரிந்த பெண் ஒருவர் சிக்கினார். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அந்த பெண்ணை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர் மீண்டும் கைவரிசை காட்டுவதற்காக கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அதன்படி மீண்டும் கோவிலுக்கு வந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் விஜயசாந்தி, கடலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

விஜயசாந்தியை கைது செய்த போலீசார் 4 பவுன் நகையை மீட்டனர். இவர் 2006-ம் ஆண்டில் இருந்து இதுபோன்று கோவில்களில் திருமண நிகழ்ச்சியில் புகுந்து நகை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News