செய்திகள்

கும்பகோணத்தில் கொடி- தோரணங்களை அகற்றுவதில் அ.தி.மு.க.- தி.மு.க. மோதல்

Published On 2019-04-17 12:44 GMT   |   Update On 2019-04-17 12:44 GMT
கும்பகோணத்தில் இன்று கொடி- தோரணங்களை அகற்றுவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று இரவு முதல் பறக்கும் படையினர் விடிய விடிய பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? என்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொடி- தோரணங்களை அகற்றுவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கும்பகோணத்தில் இன்று காலை நடந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம் நகர் பகுதிகளில் உப்புக்கார தெருவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளின் கொடி தோரணங்கள் அகற்றப்படவில்லை என்று தி.மு.க. நகர செயலாளர் சுப.தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கும்பகோணம் ஆர்.டி.ஓ. விடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கொடிகள் அகற்றவில்லை என்று கூறி அங்கு இன்று காலை சாலை மறியல் செய்ய தி.மு.க.வினர் முயன்றனர். அப்போது அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்தனர். இதனால் திடீரென அ.தி.மு.க.- தி.மு.க. வினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் கொடிகள் அகற்றப்படாததால் கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர்.

இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கட்சி கொடிகளை போலீசாரே அகற்றி இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்து கொடிகளை அப்புறப்படுத்தினர்.

இதனால் தி.மு.க.வின் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News