செய்திகள்

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-02-22 15:03 GMT   |   Update On 2019-02-22 15:03 GMT
ஆலங்குடி அருகே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், பெற்றோர்களுக்கும் இணக்கமான சூழல் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை. 

இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், பின்னர் மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி, வழைக்கொல்லை அரசு தொடக்கப்பள்ளியில்  பணியாற்றி வந்தார். இக்கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அப்பள்ளிக்கு ஒரு மாணவர் கூட வரவில்லை. அதனால் பனங்குளம் கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அத்தகைய போக்கையே அவர் கையாளுவதால் இந்த பள்ளிக்கும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவரை இடமாற்றம்  செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்றனர். 
தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் மற்றும்கீரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News