செய்திகள்

விஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்

Published On 2019-02-22 08:09 GMT   |   Update On 2019-02-22 08:36 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். #MKStalin #Vijayakanth #StalinMeetVijayakanth
சென்னை:

உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், நாட்டின் நலன் கருதி கூட்டணி விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். எனவே, அவர் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், இதனை காங்கிரஸ் தலைமை உறுதி செய்யவில்லை. தேமுதிகவை சேர்க்கும் திட்டம் இல்லை என்றும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.



இந்த சூழ்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், விஜயகாந்திடம் நலம் விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

எனினும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருக்கும் நிலையில், விஜயகாந்தை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாக தகவல் வெளியானது. அதிமுக தரப்பில் விஜயகாந்துக்கு 5 தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. இதை தேமுதிக ஏற்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திடீரென சாலிகிராமம் சென்று, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MKStalin #Vijayakanth #StalinMeetVijayakanth
Tags:    

Similar News