search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMDK"

    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.
    • மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் திறந்த ஜீப்பில் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பஸ் நிலையம் முதல் சுப்பிரமணியசுவாமி கோவில் வாசல் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரேமலதாவுக்கு வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பிரேமலதா திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் முன்பு எனது மகனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நமது கேப்டன் தே.மு.தி.க.வை தொடங்கியதும் இங்குதான். அதே இடத்தில் இன்று உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர், மண்ணின் மைந்தர், கேப்டனின் மகன், உங்கள் மகன். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை, மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    எற்கனவே இந்த தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள், விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், அவரை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. சார்பில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வேலை, மகனிடம் வழங்கிய பிரேமலதா தொடர்ந்து பேசுகையில், சூரபத்மனை வதம் செய்ய சக்தியிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், போரில் வெற்றி பெற்றது போல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை பெற இதனை தருகிறேன் என்றார்.

    • அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.
    • மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினரும், வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அவரது தாயாரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.

    தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் வரும்போது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கினார். அதன் பின், பறக்கும்படை அதிகாரிகள் கார் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். வாகன சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
    • சுதீஷ் இன்று மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.

    இதனை மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டையும் மந்திரிகளாக, எம்.பிக்களாக ஆக்கியவர்.

    அவரை தொடர்ந்து விஜயகாந்தும் சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    தருமபுரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.

    இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.

    • எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார்

    வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் பயணித்த மூத்த அரசியல் தலைவர் திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர்கள் எங்களது குடும்ப நண்பர்கள் ஆவர்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அவரை சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமானார்
    • விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்

    நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.

    இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.

    சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்த அவர் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அவர் தருமபுரிக்கு புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க. சார்பில் அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.
    • தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதிலும், முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக- தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர்," கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.

    அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    அவருடைய சின்னம் பம்பரம் சின்னம். பம்பரம் சின்னத்திற்கு வாக்கிளியுங்கள் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நிர்வாகி ஒருவர், சின்னத்தை தவறாக கூறிவிட்டதாக சி.வி சண்முகம் காதில் எச்சரித்தார்.

    தவறை சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், " மன்னித்துவிடங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில் ஒரு கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார்" என்று கூறி சமாளித்தார்.

    சி.வி சண்முகம் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர் இன்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வருகிறார்.

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வருகிறார். சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார். நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரசாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

    • 9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
    • 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிரேமலதாவின் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளது. 5 பாராளுமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    பிரேமலதாவின் சுற்றுப் பயண திட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டது. பிரேமலதா எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஊர்களில் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் வருமாறு:-

    29-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, 30-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 31-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், 1-ந்தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி.

    2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், 3 மற்றும் 4-ந் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 5 மற்றும் 6-ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, 7 மற்றும் 8-ந் தேதி கடலூர்.

    9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.

    13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கடைசி 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பிரேமலதா பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.

    ×