செய்திகள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்

Published On 2019-01-29 16:33 GMT   |   Update On 2019-01-29 16:33 GMT
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
சென்னை:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் உரிமைகளை சில நேரம் விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும்.

சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். பல மாநிலங்களில் ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாத நிலையில், நிலுவையை  தமிழகம் வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.  #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
Tags:    

Similar News