செய்திகள்

மதுரையில் நாளை பிரதமர் மோடி பிரசாரம் தொடக்கம்- 10 எம்.பி. தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார்

Published On 2019-01-26 09:15 GMT   |   Update On 2019-01-26 11:03 GMT
மதுரையில் நாளை பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 10 எம்.பி. தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். #pmmodi #bjp #parliamentelection

மதுரை:

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை பல்வேறு மாநிலங்களில் தொடங்கி உள்ளார். பா.ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா மற்றும் மாநிலத்தலைவர்களும் பல்வேறு மாநிலங்களில் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், பேரணி என்று இப்போதே தேர்தல் வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழகத்திலும் பிரதமர் மோடி நாளை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் மோடி அதே விழா மேடையில் பிரசாரத்தையும் தொடங்குகிறார். தென் மண்டல பாரதீய ஜனதா மாநாடாக இந்த பிரசார கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.


பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி, பா.ஜனதா நிர்வாகிகளிடம் தமிழக தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாற்றுகிறார்.

மேலும் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தலை சந்திக்க பொதுமக்களை அணுகும் அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்களை திரட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகளை அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

மதுரை மண்டேலா நகர் அருகே நடைபெறும் பா.ஜனதா மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் அமர இருக்கை வசதி மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியை பார்க்க வசதியாக பல்வேறு இடங்களில் பிரமாண்ட எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 மணி நேரம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பா.ஜனதா மாநாடு தமிழ் நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய கூட்டணியை உருவாக்க பாரதீய ஜனதாவிற்கு உத்வேகமாக அமையும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #pmmodi #bjp #parliamentelection

Tags:    

Similar News