செய்திகள்

ராஜபாளையம் வியாபாரிக்கு கொலை மிரட்டல்- ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2019-01-05 12:37 GMT   |   Update On 2019-01-05 12:37 GMT
ரூ.27 லட்சம் மோசடி குறித்து போலீசில் புகார் கூறிய வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 37) ரெடிமேட் ஆடை வியாபாரி.

இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜரத்தினம் (45) பழகி வந்தார். அப்போது கத்தார் நாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரிடையே கடந்த நவம்பர் மாதம் ஏற்றுமதி தொழில் வியாபார ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர் பல தவணைகளில் ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்தை மகேசுவரன் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட ராஜரத்தினம், ஏற்றுமதி தொழிலை தொடங்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் மகேசுவரன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.27 லட்சத்து 32 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் மகேசுவரன் புகார் செய்தார்.

இதனால் ராஜரத்தினம் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று மகேசுவரன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ராஜரத்தினம், அவரது தந்தை கருமலை, தாயார் கல்யாணி, சகோதரர் கண்ணன் உள்பட 7 பேர் காரில் வந்து வழிமறித்தனர். அவர்கள் போலீசில் எப்படி புகார் கொடுக்கலாம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜபாளையம் போலீசில் மகேசுவரன் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜரத்தினம் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News