செய்திகள்

தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் அழியும் நிலையில் உள்ளது - எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2018-12-17 05:53 GMT   |   Update On 2018-12-17 05:53 GMT
தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் அழியும் நிலையில் உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். #HRaja #Temples
செய்யாறு:

செய்யாறு அடுத்த செங்கட்டான்குண்டில் நடந்த திருமண விழாவில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். பின்னர் அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்டார். அதை தொடர்ந்து சிதிலமடைந்த திருநீரணிந்தீஸ்வரர் கோவிலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கட்டான்குண்டில் கிராமத்தில் உள்ள திருநீரணிந்தீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து 45 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இந்துகளின் வழிபாட்டு தலங்களை அழிக்கும் துறையாக இருந்து வருகிறது. கோவிலில் 23 பஞ்சலோக சிலைகள் இருந்தது. அதில் 6 சிலைகள் திருட்டு போனது. மீதமுள்ள 17 சிலைகளை ஊர் பொதுமக்களே பாதுகாத்து வருகின்றனர்.

1989-ம் ஆண்டில் திருவண்ணாமலையில் உள்ள சிலை பாதுகாப்பு காப்பகத்தில் சிலைகளை வைக்க அரசு முயற்சித்தபோது அதனை எடுத்து செல்ல ஊர்மக்கள் அனுமதிக்கவில்லை. இக்கோவிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தின் குத்தகை வருவாயை ஆண்டுதோறும் வசூலிக்கும் இந்து சமய அறநிலையதுறையினர், அதில் ஒரு பைசா கூட விளக்கேற்ற செலவு செய்யவில்லை.

இக்கோவிலை போல ஊழல் நிறைந்த இந்து சமய அறநிலையத்துறையால் தமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் அழியும் நிலையில் உள்ளது. கோவில் அழிந்து போக காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Temples

Tags:    

Similar News