செய்திகள்

லோக் ஆயுக்தாவில் விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும்- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Published On 2018-12-01 09:24 GMT   |   Update On 2018-12-01 09:24 GMT
லோக் ஆயுக்தாவில் விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். #jawahirullah #Lokayukta

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த அமைப்பிற்கான சட்டவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த விதிகளில் குறிப்பிட்ட சில விதிமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதில் “லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணைகள் ரகசியமாக நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் மீது நடத்தப்படும் ஊழல் விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் ரகசியமாக வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது. இதுபோன்ற நடவடிக்கைகளால் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படாமல் இருந்தால் அவர்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுதலாக இருக்கும்.

நீதியியல் நிர்வாகத்தில் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை மீறி தமிழக அரசின் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

புகார் அளித்தவர் தமது விவரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினால் அதில் ரகசியம் பாதுகாக்கலாமே தவிர, தமிழக அரசே முன்வந்து லோக் ஆயுக்தா புகார்தாரர், மற்றும் அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆகியோரின் விவரங்கள் உள்ளிட்டவற்றை ரகசியமாக வைப்பது இந்த லோக் ஆயுக்தா அமைப்பை பலவீனப்படுத்தும் சூழல் உருவாகும்.

எனவே, தமிழக அரசின் இந்த ரகசிய விசாரணை என்ற விதிமுறையை உடனே மாற்றி, விரைவில் லோக் ஆயுக்தா அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #jawahirullah #Lokayukta 

Tags:    

Similar News