செய்திகள்

கஜா புயல் நிவாரண தொகையினை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்- தம்பிதுரை

Published On 2018-11-17 07:41 GMT   |   Update On 2018-11-17 07:41 GMT
கஜா புயல் நிவாரண தொகையினை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #GajaCyclone
கரூர்:

கரூர் தான்தோன்றி வட்டார பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை இன்று மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரிகளுடன் மக்களின் குறைகளை கேட்க வந்திருக்கிறோம். மக்கள் அவர்களின் தேவைகளை சொல்கிறார்கள். அதனை அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்கள். கஜா புயலில் சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்பட்டதாக இந்த அரசை எல்லோரும் பாராட்டியது பாராட்டுக்குரியது. தானே புயல் முடிந்து போன ஒன்று. அந்த வி‌ஷயத்தை இப்போது பேசுவது அர்த்தம் அல்ல. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு புயல்களை அ.தி.மு.க. அரசு சந்தித்துள்ளது.

அந்த வழிகாட்டுதலை வைத்து முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனது தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, விராலிமலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் காற்றினால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உடனே குழு வரவழைத்து நிவாரண உதவிகளை வேண்டுகோளாக வைப்போம். இந்த மாதிரி மத்திய குழு வருவதற்கு முன்பாக மத்திய அரசு நிதி அறிவிப்பது வழக்கம். அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.


சேத மதிப்பினை கணக்கெடுத்து முதல்வரும், துணை முதல்வரும் சொல்வார்கள். சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்ய அமைச்சர் தங்கமணியிடம் பேசி இருக்கிறேன். மத்திய அரசு உடனே நிதி ஒதுக்கவில்லை என்றால் நேரடியாக சென்று பிரதமரையோ, சம்பந்தபட்ட அமைச்சரையோ சந்தித்து கோரிக்கை வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கீதா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.  #ADMK #ThambiDurai #GajaCyclone
Tags:    

Similar News