செய்திகள்

புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-11-16 12:14 GMT   |   Update On 2018-11-16 12:14 GMT
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
சென்னை:

கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் குறித்து எச்சரிக்கை விட்டிருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. 

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்; அதில் அவர் கூறியிருப்பதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் மக்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதிக்க 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

முதற்கட்ட அறிக்கைப்படி சுமார் 13,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பழுதான மின்கம்பங்களை மாற்றுவதற்காக ஏற்கனவே 7,000 மின்கம்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 5,000 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புயலுக்கு முன்னர் 81,948 பேர் வெளியேற்றப்பட்டு 471 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கிடு செய்யுமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அதில் தெரிவித்துள்ளது. #GajaCyclone #EdappadiPalanisamy
Tags:    

Similar News