செய்திகள்

பொதுமக்களை அரசு நோட்டமிட கூடாது- ஆதார் தீர்ப்பு பற்றி கமல் பேட்டி

Published On 2018-09-26 07:44 GMT   |   Update On 2018-09-26 07:44 GMT
தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் அரசு பொதுமக்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது என்று ஆதார் தீர்ப்பு பற்றி கமல் கருத்து தெரிவித்துள்ளார். #KamalHaasan #AadhaarVerdict
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை வந்து இருக்கும் ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டி வருமாறு:

பதில்:- மிகப்பெரிய சிறந்த அரசியல் ஆளுமையை சந்தித்து வந்திருக்கிறேன். புதிதாக வந்தவர். அரசியல் தெரியாது என்று விமர்சனங்கள் செய்தபோது தனக்கு தெரியும் என்று செய்து காட்டியவர். புதிய புதிய நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இருக்கிறார்.

அவர் கொண்டு வந்த திட்டங்களில் பல இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள். மற்ற மாநில முதல்வர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மக்களுக்கு தேவையான வி‌ஷயங்களை செய்து வருகிறார். முக்கியமாக வெள்ள பாதிப்பு போன்ற பேரிடர்களில் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறார். அவரை பாராட்டிவிட்டு சில அறிவுரைகள் கேட்டுக்கொண்டேன்.

கே:- பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பற்றிய தீர்ப்பு?

ப:- தீர்ப்பு வந்து இருக்கிறது. ஆனால் திறமைக்கு நாம் பதவி உயர்வு கொடுத்தே ஆக வேண்டும். சாதி அடிப்படையில் அதை மறுக்க முடியாது.

கே:- ஆதார் சட்டம் பற்றி வந்துள்ள தீர்ப்பு?

ப:- கண்டிப்பாக. தனி மனித உரிமைகளை மீறுவதாக எந்த திட்டமும் இருக்க கூடாது. அரசு மக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்கள் எல்லாமே போற்றுதலுக்குரியது.


ஆனால் தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் அவர்களை நோட்டமிடுவதும், ஜன்னலை எட்டி பார்ப்பதும் சரியானது கிடையாது. எப்போதுமே கண்காணிக்கும் அரசாக இருக்க கூடாது.

கே:- மக்கள் நீதி மய்யம் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதில்லை என்ற குற்றச்சாட்டு?

ப:- நாங்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். சுட்டுக்கொல்லும் வரை போராட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். இப்படியும் போராட்டங்கள் செய்யலாம். கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்வது மக்கள் நீதி மய்யம் தான்.

இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan  #AadhaarVerdict
Tags:    

Similar News