செய்திகள்

ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயல் சின்னம் - வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Published On 2018-09-20 11:10 GMT   |   Update On 2018-09-20 11:10 GMT
கிழக்கு மத்திய வங்க கடலில் நிலைகொண்ட புயல் சின்னம் ஒடிசாவை நாளை கடப்பதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Storm
சென்னை:

கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.

மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புயல் சின்னத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman
Tags:    

Similar News