செய்திகள்

பா.ஜ.க.வினர் என்னை தாக்கியது உண்மைதான் - ஆட்டோ டிரைவர் பேட்டி

Published On 2018-09-19 10:20 GMT   |   Update On 2018-09-19 10:20 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியபோது பாரதிய ஜனதாவினர் என்னை தாக்கியது உண்மைதான் என சைதாப்பேட்டை ஆட்டோ டிரைவர் கதிர் கூறினார்.
சென்னை:

சைதாப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் தெருக்கூத்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி கேட்டார். உடனே அவரை பா.ஜனதாவினர் பிடித்துச் சென்று அப்புறப்படுத்தினர்.

அப்போது அவர் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியது. அவர் தாக்கப்படவில்லை. வேண்டும் என்றே அவதூறு பரப்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் சைதாப்பேட்டையில் உள்ள ஆட்டோ டிரைவர் கதிர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு இனிப்பு வழங்கி நலம் விசாரித்தார்.

உங்களை யாரும் தாக்கினார்களா? என்று கதிரிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார். அதற்கு அவர் என்னை யாரும் தாக்கவில்லை. இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்றார். இதுபற்றி ஆட்டோ டிரைவர் கதிர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது நான் அவரிடம், பெட்ரோல்-டீசல் விலை ஏறிக்கொண்டே சென்றதால் அதுபற்றி கேள்வி கேட்க சென்றேன். அப்போது அங்கிருந்த பா.ஜனதாவினர் ஒருமுறை என்னை தாக்கியது உண்மைதான்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் இந்த சம்பவம் நடந்ததால் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இது தெரியாது.

என் வீட்டுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

நான் மது அருந்தி விட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு. நான் மது அருந்தவில்லை.

இவ்வாறு ஆட்டோ டிரைவர் கதிர் கூறினார்.
Tags:    

Similar News