செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர்-டி.ஜி.பி.யை தமிழக அரசு பதவி நீக்க வேண்டும்: வைகோ

Published On 2018-09-06 07:11 GMT   |   Update On 2018-09-06 07:11 GMT
தமிழக அரசு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பியை பதவி நீக்கம் வேண்டும் என்று நெல்லையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko #Vijayabaskar #GutkhaScam
நெல்லை:

நெல்லையில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ஊழலின் உச்சகட்டத்தில் உள்ளது என்பது சி.பி.ஐ. சோதனையில் நிரூபணமாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டி.ஜி.பி.ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழக அரசு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். குட்கா விவகாரம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது. தற்போது தி.மு.க. வழக்கு தொடர்ந்ததையடுத்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா குழுமத்தினரும், ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினரும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

தமிழகத்தின் காவிரி படுகையை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக இயற்கை வளங்களை அழிக்கும் கொடிய நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்துக்கு எதிரான அரசு மத்திய அரசு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மாணவியின் எதிர்காலத்தை பாதிக்கும். உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #Vijayabaskar #GutkhaScam
Tags:    

Similar News