இந்தியா

பா.ஜ.க.-வில் இணையும் சி.பி.எம். நிர்வாகி? - கேரள அரசியலில் பரபரப்பு

Published On 2024-04-27 10:03 GMT   |   Update On 2024-04-27 10:03 GMT
  • கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
  • ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

தென் மாநிலங்களில் தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முயற்சிகளை கையாண்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அடிக்கடி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

இதில் கேரள மாநிலத்தில் 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை கேரளாவில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை பாரதிய ஜனதா களம் இறக்கியது. மேலும் மற்ற கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் சிலர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கருணாகரன் மகள் பத்மஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

இதனை இடது சாரி கூட்டணி குறை கூறி வந்த நிலையில், அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ஈ.பி.ஜெயராஜன், பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் அவர், தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் பாரதிய ஜனதாவின் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசியது தான். திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

இந்த சந்திப்பு விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜன், நான், எல்.டி.எப். கன்வீனர். என்னை சந்திக்க பலர் வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா முக்கிய தலைவர்கள் அனைவரும் என்னை சந்திக்க வந்துள்ளனர். ஜவடேகருடனான சந்திப்பு தனிப்பட்டது. எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி, இந்த சந்திப்பு, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்துள்ளது. கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஜவடேகரை சந்திப்பதில் தவறில்லை. இங்கு தேர்தல் மூலம் பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. ஈ.பி.ஜெயராஜன் மீதான குற்றச்சாட்டுகள், கம்யூனிஸ்டு எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதி என்றனர். இருப்பினும் ஜெயராஜன் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News