உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் பாஜக நிர்வாகி குல்தீப் சிங் தண்டனை நிறுத்திவைப்பு!
- காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
- விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.