இந்தியா

பெங்களூரை உலுக்கிய சொகுசு கார் விபத்து - 6 சிறுவர்கள் உயிரிழந்ததன் அதிர்ச்சி பின்னணி

Published On 2026-02-14 09:56 IST   |   Update On 2026-02-14 09:56:00 IST
  • 160 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சென்றது.
  • உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஹோஸ்கோட் பகுதியின் கம்பளிபுரா கேட் சேட்டிலைட் ரிங் ரோட்டில் நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

நேற்று அதிகாலை 5:15 மணியளவில் 160 கி.மீ வேகத்தில் வந்த வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ககன் (26) என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் ககன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது மோதிய வேகத்தில், கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார், சுமார் 150 மீட்டர் தூரத்திற்குத் தேய்த்துக் கொண்டே சென்று நின்றது. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது.

காரில் பயணம் செய்த 16 வயதுடைய அஹ்ரம் ஷெரீப் , 17 வயது அயன் அலி, பாரத், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ் , முகமது ஷேக் ஆகிய 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் வீட்டுக்கு தகவல் தர போலீசார் போன் செய்தபோது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தேர்வு நெருங்குவதால் தங்கள் மகன்கள் வீட்டின் அறையில் படித்துவிட்டு, உறங்குகிறார்கள் என்று நினைத்திருந்த பெற்றோர், "உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்" என்று போலீசார் கூறியபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் மகன்களின் அறைக்கு சென்று பார்த்தபோது படுக்கைகள் காலியாக இருந்துள்ளன. அப்போதுதான் தங்கள் மகன்கள் தங்களுக்கு தெரியாமல் வெளியே சென்றதை அவர்கள் உணர்த்தனர்.

உயிரிழந்த சிறுவர்களில் ஒருவனான அயன் அலி தனது தந்தையின் காரில் ஐவரையும் அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. 6 மாதத்திற்கு பின்புதான் அந்த காரை தந்தை வாங்கியிருந்த நிலையில் அயன் அதை வெளியே எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான். 

மருத்துவமனையில் உடல்களை அடையாளம் காண வந்த பெற்றோரில் ஒருவர் கூறுகையில், வெளியே செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி நள்ளிரவிலும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம்.

ஆனால், அதிகாலையில் எழுந்து பார்த்தால் மகனைக் காணவில்லை. வந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் போலீசிடம் இருந்து தகவல் தான்வந்தது என்றார்.  

Tags:    

Similar News