பங்குச்சந்தை மோசடியில் ரூ.8.10 கோடி இழந்த முன்னாள் IPS அதிகாரி.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
- 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்டனர்.
- இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
பஞ்சாபில் பங்குச்சந்தை மோசடியில் பணம் இழந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஜி-யான அமர் சிங் சாகல், பாட்டியாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், மோசடி குறித்து விவரித்துள்ளார்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்ட கும்பல், தங்களை நிதி ஆலோசகர்கள் என்று கூறிக்கொண்டு இவரை ஏமாற்றியுள்ளனர்.
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஐ.பி.ஓ பங்குகள் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி இவரை கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
லாபத்தைப் பெற வேண்டும் என்றால் வரி மற்றும் சேவைக்கட்டணம் என மேலும் பல கோடிகளைச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பல தவணைகளாக 8.10 கோடி ரூபாய் வரை செலுத்தியும், அவர்களால் ஒரு ரூபாயைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மோசடி குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
பாட்டியாலா போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு மூத்த காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.